உணவு விழுங்க முடியாமை பிரச்னைக்கு நவீன சிகிச்சை

உணவு விழுங்க முடியாமை பிரச்னைக்கு உரிய நவீன சிகிச்சை குறித்து விளக்கும் டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர். உடன், நவீன சிகிச்சை மூலம் குணம் அடைந்த வரிசைகனி.
உணவு விழுங்க முடியாமை பிரச்னைக்கு எண்டோஸ்கோப்பியுடன் இணைந்த அறுவைச் சிகிச்சை அல்லாத நவீன சிகிச்சை முறை சென்னை நுங்கம்பாக்கம் மெடிந்தியா மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நவீன சிகிச்சை முறை மூலம் உணவு விழுங்க முடியாமல் அவதிப்பட்ட மூன்று நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக இரைப்பை-குடல் மருத்துவ நிபுணரும் மெடிந்தியா மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:-
“”நாம் மென்று சாப்பிடும் உணவு, உணவுக் குழாய்க்குள் சென்ற பிறகு,
தன்னிச்சையாகச் திறந்து மூடும் தசை வால்வு வழியாக இரைப்பைக்குச் செல்லும். இந்தத் தசை வால்வு திறந்து மூடுவதில் பிரச்னை ஏற்படுவதற்கு மருத்துவத்தில் “அகலாஸியா கார்டியா’ என்று பெயர்.
இத்தகைய பிரச்னை ஏற்படுவதற்கு உரிய காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தசை வால்வு திறந்து மூடுவதில் பாதிப்பு ஏற்பட்டால் உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும். பிரச்னை தீவிரமடையும் நிலையில் மூக்கு வழியாக நீர் வடிதல்-சாப்பிட்ட உணவு மூக்கு வழியாக வெளியேறுதல், கண்ணில் நீர் வருதல் போன்ற சிரமங்கள் ஏற்படும்.
இத்தகைய பாதிப்பு ஏற்படுவோர் உணவை விழுங்குவதற்கு நிறைய தண்ணீர் குடிப்பார்கள்.
மேலும் மற்றவர்களுக்கு இணையாக விரைவாக உணவு சாப்பிட முடியாது என்பதால், பிரச்னை உள்ளோர் விருந்து விழாக்களைத் தவிர்த்து வருவார்கள். பரிசோதனைகள் என்ன? இதயத்தின் செயல்பாட்டை அறிய இசிஜி எடுப்பதைப் போன்று, மேலே குறிப்பிட்ட உணவுக் குழாய் இறுதி தசை வால்வின் செயல்தன்மையை அறிய “மானோமெட்ரி’ என்ற கருவி பரிசோதனை, எண்டோஸ்கோப்பி உள்ளிட்ட பரிசோதனைகள் உதவும்.
நவீன சிகிச்சை என்ன? உணவு விழுங்க முடியாமை பிரச்னை தீவிரமாக இல்லாத நிலையில் மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும். பாதிப்பு தீவிரமாக இருந்தால் பொதுவாக பலூன் மூலம் வால்வை அகலப்படுத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலூன் சிகிச்சையில் தோலில் கீறல் செய்யப்பட்டு, நோயாளி சில நாள்கள் மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கும். ஆனால் “பர் ஓரல் எண்டோஸ்கோப்பி மையாட்டமி’ (டஞஉங) என்ற எண்டோஸ்கோப்பியுடன் இணைந்த நவீன சிகிச்சை முறையில் தோலில் கீறல் ஏற்படுத்தாமல் எளிதாக திறந்து மூடும் வகையில் வால்வு தசை வெட்டப்படும்.
அதாவது, வாய்ப் பகுதியில் உணவுக் குழாயின் முதல் மற்றும் இரண்டாவது லேயருக்கு நடுவில் எண்டோஸ்கோப்பிக்குள் கத்தியை நுழைத்து வால்வுத் தசையை வெட்டுவதே நவீன சிகிச்சை முறையாகும்.
தோலில் கீறல் ஏற்படாமல் செய்யும் இந்த நவீன சிகிச்சையை செய்து கொள்வோர், சிகிச்சைக்கு மறுநாளே வீடு திரும்ப முடியும்” என்றார் டாக்டர் டி.எஸ். சந்திரசேகர்.
உணவு விழுங்க முடியாமை பிரச்னையால் அவதிப்பட்டு வந்த சென்னையைச் சேர்ந்த சுமதி, புதுச்சேரியைச் சேர்ந்த வரிசைகனி ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் மெடிந்தியா மருத்துவமனையில் இந்த நவீன சிகிச்சை மூலம் நிவாரணம் அடைந்ததை விவரித்தனர்.
இதே போன்று 24 வயது பெண் நோயாளி ஒருவரும் இந்த நவீன சிகிச்சை மூலம் குணம் அடைந்துள்ளார்.